கறார் காட்டும் போலீசார்

திண்டுக்கல் சிறுமலையிலிருந்து தினமும் காய்கறி லோடு ஏற்றி வரும் வாகனங்களை மறித்து போலீசார் ஓவர் லோடு என்ற பெயரில் பணம் வசூலிக்கும் சம்பவங்களால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.

திண்டுக்கல்லிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்கு பலா, வாழை, காய்கறிகளில் சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்கள் விளைகின்றன.

இங்குள்ள விவசாய பொருட்களை வண்டிகளில் லோடு ஏற்றி அவைகளை மார்க்கெட்டிற்கு கொண்டு சேர்க்கும் முன் விவசாயிகள் கண்விழி பிதுங்குகின்றனர். ஏற்கனவே காய்கறிகள் வரத்து எல்லா பகுதிகளிலும் அதிகமானதால் விலை குறைந்துள்ளது. இதனால் சிறுமலை விவசாயிகள் பலரும் சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளை பறிக்காமல் செடிகளிலேயே கருக விட்டுள்ளனர்.

ஒருசிலர் மட்டும் கிடைக்கும் விலை போதும் என்ற அடிப்படையில் பறித்து வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். தினமும் சிறுமலையிலிருந்து 20க்கு மேலான காய்கறி வண்டிகள் காந்தி மார்க்கெட், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வருகிறது.

நத்தம் ரோட்டில் சிறுமலை பிரிவு, விருந்தினர் மாளிகை அருகே உட்பட 3 இடங்களில் போலீசார் நின்று குறிப்பாக சிறுமலையிலிருந்து காய்கறி லோடுகளை ஏற்றி வரும் வண்டிகளை மடக்கி 'ஓவர்லோடு'எனக்கூறி பணம் வசூலிக்கின்றனர்.

ஏற்கனவே உற்பத்தி செய்த காய்கறிகளுக்கு விலை இல்லாமல் தவிக்கும் விவசாயிகள் தற்போது போலீசாருக்கு பணம் செலுத்துவதால் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். எஸ்.பி.,பிரதீப் இப்பிரச்னை மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement