சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு

19

சென்னை: சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டு வலம வந்தவர் அஸ்வின். சென்னையை சேர்ந்தவர். மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவில் அவரது வீடு உள்ளது. 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற இவர், ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.


இந்நிலையில், இவருக்கு சொந்தமான கேரம்பால் ஈவன்ட் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனம், அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அஸ்வின் சாலை என பெயர் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. இதனை பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபரம் முதலாவது தெருவுக்கு அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது.


மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement