கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்

14

வேலூர்: வேலூரில் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ மாணவிகள் பேரணியாக வந்து போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


வேலுாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பேராய கட்டுப்பாட்டில் இயங்கும், ஊரீஸ் கல்லுாரியில், கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன், பி.எச்டி., படிப்பிற்காக, 25 வயது மாணவி சேர்ந்தார். இவருக்கு வழிகாட்டி பேராசிரியராக கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன், 52, இருந்தார். அவர் அப்பெண்ணை, தான் பணியாற்றிய துறையில்,கவுரவ விரிவுரையாளராக நியமித்து, பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


அப்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பாதிக்கப்பட்ட மாணவி, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால், வேலுார் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன் மீது, 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Latest Tamil News
அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கல்லூரி மாணவ, மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அண்ணா சாலை வழியாக பேரணியாக வந்து மகளிர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவ, மாணவிகளுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement