கொடைக்கானல் வில்பட்டியில் மரங்கள் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி மயானத்தில் முறைகேடாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் அன்னை சத்யா காலனி, அட்டுவம்பட்டி கிரஷ் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குங்குலிய மரங்களை அகற்ற கோரினர். 55 மரங்களை வனத்துறை ஆய்விற்கு பின் அகற்ற ஊராட்சி மூலம் அனுமதி அளிக்கப்பட்டது. 55 மரங்களுக்கு அனுமதி பெற்று நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக 6 மாதத்திற்கு முன் ஊராட்சி உறுப்பினர்கள் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

ஜனவரியில் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட பின் அட்டுவம்பட்டி கிரஷ் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான மயானத்தில் அனுமதியின்றி ஏராளமான மரங்கள் சில தினங்களாக முறைகேடாக வெட்டி கடத்தப்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா ராஜமாணிக்கம்,கூறுகையில்,'' வில்பட்டி ஊராட்சியில் 55 மரங்கள் மட்டுமே வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது. மயான பகுதியில் மரங்கள் வெட்ட அனுமதி அளிக்கவில்லை. வனத்துறை, ஒன்றிய அதிகாரிகள் சேர்ந்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' வில்பட்டி ஊராட்சியில் 55 மரங்களுக்கு மட்டுமே கலெக்டர் அனுமதி அளித்தார். லாரிகளில் மரங்களை ஏற்றி செல்வதற்கு 26 நடைக்கு பெர்மிட் வழங்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டுள்ளது குறித்து புகார் வந்துள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற தவறுகளை கண்காணிப்பதில் தங்களுக்கு இடர்பாடுகள் உள்ளது ,''என்றார்.

ஊராட்சி செயலாளர் வீரமணி கூறுகையில், '' 55 மரங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் 110 மரங்களை கூடுதலாக வெட்டி உள்ளார். அவரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயான பகுதியில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டப்படுவது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement