உடைந்தது பாதாள சாக்கடை குழாய் தார் ரோட்டில் உருவானது பள்ளம்

கோவை: கோவை, பாரதி பார்க் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால், தார் ரோட்டில் நேற்று பள்ளம் உருவானது.

கோவையில், பழைய மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் பதித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது குடியிருப்புகள் பெருகி விட்டதால், கழிவு நீர் வெளியேற்றம் அதிகமாக இருக்கிறது.

அந்தக்காலத்தில் சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது; சில இடங்களில் அரிப்பால் உடைப்பு ஏற்படுகிறது.

மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி பார்க் ரோட்டில், மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து திரும்பியதும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கு முன், பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. கழிவு நீர் ஓடியதால் மண் இலகுவாகி சரிந்தது. அதன் காரணமாக, தார் ரோடு பெயர்ந்து கீழிறங்கி, அப்பகுதியில் பள்ளம் உருவாகியுள்ளது.

இதைப்பார்த்த போலீசார், அப்பகுதியை சுற்றிலும் டிவைடர் வைத்து, போக்குவரத்தை தடை செய்தனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தோண்டி எடுத்து, புதிய குழாய் பதிப்பதற்கான பூர்வாங்க பணியை துவக்கியுள்ளனர். ஒரு மேனுவல் பகுதியில் இருந்து அடுத்துள்ள இன்னொரு மேனுவல் வரையிலான குழாயை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கின்றனர்.

திட்ட அறிக்கை தயாரிப்பு

பழைய மாநகராட்சி பகுதிகளில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. புதிதாக மாற்றுவதற்கு, தற்போதுள்ள மக்கள் தொகை மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கைக்கேற்ப திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகள் மேற்கொள்வோம்.

- - சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர்

Advertisement