பயனர் தகவல்களை திருடிய 300 செயலிகள்: ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்

1

வாஷிங்டன்: பயனாளிகளுக்கு தெரியாமலேயே மொபைல் போனிலிருந்து அவர்களின் தகவலை திருடியதாக 300க்கும் மேற்பட்ட செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை கூகுள் நிறுவனம் அவ்வபோது சோதனை செய்கிறது. அதில் பிரச்னைகளுக்கு உள்ளாகும் செயலிகள் உடனடியாக நீக்கப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது பயனாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனில் இருந்து தகவல்களை திருடியதாக 300க்கும் மேற்பட்ட செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இவற்றில் பல செயலிகள் மோசடி செய்பவருக்கு உதவியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தகவலை திருடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட நிதி தொடர்பான தகவல்களை மோசடியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 20 கோடி போலி விளம்பரங்களை உருவாக்கி அதில் பணம் சம்பாதித்துள்ளது. இதனால் விளம்பர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதும் தெரிய வருகிறது.


இந்த செயலிகள் மருத்துவம், க்யூ ஆர் ஸ்கேனர், வால்பேப்பர், கண்காணிப்பு செயலிகள் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளன. இவை மொபைல் போனில் அனைத்து நேரமும் பின்னால் இருந்து செயல்பட்டு தகவல்களை திருடி வந்துள்ளது. அவற்றை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் அந்த செயலிகள் இருந்துள்ளன.

இதனையடுத்து, தற்போது ஆண்ட்ராய்டு 13 பதிப்பு பயன்படுத்துவார்கள் தங்களது சாதனத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement