பல்லடம் வழக்கில் குற்றவாளியை பிடிக்க வேகமெடுக்கும் விசாரணை: களத்தில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி.,

2

திருப்பூர்: திருப்பூர், சேமலைகவுண்டம்பாளையத்தில் கடந்த நவ., மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவங்கியது. முதற்கட்டமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடந்தது.


@1brதிருப்பூர் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் கடந்த நவம்பரில் நடந்த கொலை தமிழகத்தை உலுக்கியது. கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள், அவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

அமலாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொலைகள் தொடர்பாக பல்லடம் டி.எஸ்.பி .,சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கொலை நிகழ்ந்த தெய்வசிகாமணியின் வீடு, அவரது தோட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி என சல்லடைபோட்டு தேடியும் சிறு தடயம் கூட கிடைக்கவில்லை. அத்துடன் தெய்வ சிகாமணியின் வீடு சேமலைக்கவுண்டன்
பாளையம் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது.

அங்கு சி.சி.டி.வி., இல்லாத காரணத்தால் சரியான துப்பு கிடைக்காமல் போலீசார் விசாரணையில் திணறினர். இதை தொடர்ந்து, தனிப்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கொலை நடந்த ஸ்பாட்டில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் தேடுதல் வேட்டை நடந்தது.


பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ஜூவல்லரி, பேக்கரி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., காட்சிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முன்னாள் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஏற்கனவே ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சென்னிமலை மற்றும் காங்கேயத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த 5 முதியவர்கள் இதே பாணியில்தான் கொலை செய்யப்பட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில், அந்த வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அதிலும் துப்புத் துலங்கவில்லை.


இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி., காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே 14 தனிப்படையில் இருந்த போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்கட்டமாக இறந்த செந்தில்குமாரின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement