5937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள்; தமிழகத்தில் உருவாக்கம்!

சென்னை: தமிழகத்தில் 5,937 ஏக்கரில் சதுப்பு நிலக்காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 3,539 ஏக்கரில், அழிந்த சதுப்பு நிலக்காடுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடலோர மாவட்டங்களில் அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகள் (மாங்குவோர் வனம்) பல்லுயிர் சூழல் கொண்டது.


சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.
இதன் சூழல் முக்கியத்துவம் கருதி உலகம் முழுவதும் இத்தகைய வனங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழகத்திலும் பசுமை தமிழகம் இயக்கம் மூலம் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மாநிலத்தில் 5,937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி, அழிந்து போன 3539 ஏக்கர் சதுப்பு நிலக்காடுகளை மறு உருவாக்கம் செய்யும் பணியும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.


இந்த பணிகள் அனைத்தும், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், துாத்துக்குடி, சென்னை மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இவை அனைத்தும் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ளன. புதிய சதுப்பு நிலக்காடுகள் உருவாக்கப்படுவதன் மூலம் அந்தந்த பகுதியில் பல்லுயிர் பரவல் அதிகரிக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளவும் முடியும்.



அறிவியலின் துணையுடன் கூடிய இத்தகைய முயற்சிகளால் பசுமை நிறைந்த எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என்று தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement