சுற்றுலா திட்டம் அறிவிப்பதற்குள் 'லீவு' முடிந்து விடும்: அண்டை மாநிலங்கள் சுறுசுறுப்பு; தமிழகம் 'கொர்'

1

சென்னை: அண்டை மாநிலங்கள், கோடை விடுமுறையை ஒட்டி, தங்கள் மாநிலங்களுக்கு சுற்றுலா பயணியரை ஈர்க்க, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தமிழக சுற்றுலா துறை, கோடை சுற்றுலா திட்டத்தை அறிவிக்க அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. திட்டம் அறிவிக்கப்படுவதற்குள், 'லீவு' முடிந்து விடும் போல உள்ளது என, சுற்றுலா ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர்.

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், ஒரு நாள் மாமல்லபுரம் சுற்றுலா உட்பட, 30 தொடர் சுற்றுலா திட்டங்கள்; ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என, 15க்கும் மேற்பட்ட பருவ கால சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள தொடர் சுற்றுலாக்களில், குறிப்பிட்ட சில திட்டங்களே செயல்பாட்டில் உள்ளன.

கோடை விடுமுறையை ஒட்டி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழக சுற்றுலாத்துறை எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இது, சுற்றுலா பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, சுற்றுலா பயணியர் சிலர் கூறியதாவது:

தமிழக சுற்றுலா துறை சார்பில், 40க்கும் மேற்பட்ட தொடர் மற்றும் பருவ கால சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், எப்போது கேட்டாலும், ஆன்மிக சுற்றுலா மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக கூறுகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

குடும்பத்துடன் விடுமுறையை சுற்றுலா தலங்களில் செலவிட, மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், தமிழக சுற்றுலாத்துறை, கோடை கால சுற்றுலா மற்றும் சலுகை எதையும் அறிவிக்காமல் உள்ளது. கேரளாவில் கோடை விடுமுறையையொட்டி, பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில், ஹெலி சுற்றுலா, சாகச சுற்றுலா, பயண அனுபவ மேம்பாடு என, சிறப்பு சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கேரளா சுற்றுலாத்துறை சார்பில், பிற மாநிலங்களில் விளம்பரப்படுத்தி, சுற்றுலா பயணியரை ஈர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 20 முதல் 30 சதவீத கட்டணம் தள்ளுபடி சலுகையுடன், கோடை சிறப்பு சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக சுற்றுலா துறையும் விரைவாக கோடை சுற்றுலா திட்டங்களையும், சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை சுற்றுலா திட்டங்கள் தயாராக உள்ளன. அமைச்சரின் அனுமதி கிடைத்ததும், அவை அறிவிக்கப்படும்' என்றனர்.

Advertisement