இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்ற 8 வயது சிறுவன்

பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செய் கவுடா, 8. இவர் ஹொஸ்கோட் பகுதியில் உள்ள போலரிஸ் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.

தன் சிறுவயதில் இருந்தே, கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பள்ளியில் நடக்கும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்து உள்ளார். சிறு வயதிலேயே கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கி உள்ளார்.

இது மட்டுமின்றி பல்டி அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பல்டி அடிப்பது என்றால் சாதாரணமானது இல்லை. முன்னும், பின்னும் தொடர்ந்து இடைவிடாமல் பல முறை பல்டி அடிப்பது. ஒரே தடவையில் விடாமல் 25 முறைக்கு மேல் முன்னும், பின்னும் பல்டி அடித்து பாராட்டு பெற்று உள்ளார்.

தான் கற்றுக்கொண்ட வித்தையை சமீபத்தில் பள்ளி வளாகத்தில் நடந்த கராத்தே நிகழ்ச்சியில், அனைவர் முன்னிலையும் செய்து காண்பித்தார்.

அப்போது, விடாமல் 46 முறை முன்னும், பின்னுமாக பல்டி அடித்தார். அவரது சாகத்தை பார்த்து அனைவரும் மிரண்டனர்.


தனஞ்செய் கவுடா அடித்த பல்டியை பார்த்து, பலருக்கும் தலை சுற்றி போனது. 8 வயதில் இடைவெளி விடாமல் தொடர்ந்து 46 முறை முன்னும், பின்னும் பல்டி அடித்து சாதனை படைத்ததால் சிறுவரின் பெயர் ஆசிய சாதனை புத்தகத்திலும், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளது.சிறுவனுக்கு விருதுகள் வழங்கி பள்ளி நிர்வாகம் கவுரவித்தது. தற்போது, தனஞ்செய் பள்ளி அளவில் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார்

-நமது நிருபர்----.

Advertisement