கொலை செய்யப்படாமல் இருப்பதற்கு மக்கள் சந்தோஷப்படலாம்: சீமான்

இளையான்குடி : ''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், நாம் இன்னும் கொலை செய்யப்படாமல் இருக்கிறோமே என சந்தோஷப்பட வேண்டும்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., ஆட்சியைவிட தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் கொலைகள் குறைவு என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஒரு கொலை என்றாலும், அது கொலைதான்.

தமிழகத்தில் தினந்தோறும் ஏராளமான கொலைகள் நடைபெறுகின்றன. இதனால், பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி விட்டது.

தி.மு.க., ஆட்சியில், நாம் இன்னும் கொலை செய்யப்படாமல் இருக்கிறோமே என ஒவ்வொருவரும் சந்தோஷப்பட வேண்டும்.

டாஸ்மாக்கில், ௧,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், டில்லியில் 150 கோடி ரூபாய்க்கு ஊழல் என்றதும், முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். டில்லிக்கு ஒரு நீதி; தமிழகத்துக்கு வேறொரு நீதி.

அதேபோலத்தான், ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்குவதற்கான வாகன கட்டணத்தில், 950 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக சொல்கின்றனர். அதிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் உள்ள 'இல்லம் தேடிக் கல்வி'யை செயல்படுத்துகின்றனர்.

தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்படி என்றால், தி.மு.க., அரசு மட்டும் மறுப்பது ஏன்?

கடனில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், எந்த தகுதியும் இல்லாத தமிழகம் தான், எல்லாவற்றிலும் முன்னணி என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

தற்போதைய ஆட்சி அகற்றப்படும். விரைவில் துாய ஆட்சி தமிழகத்தில் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement