போலீஸ் மிரட்டலால் ஓட்டம் பிடித்த பா.ஜ.,

ராசிபுரம் : ராசிபுரம் டாஸ்மாக் மதுபான கடை சுவரில், தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ., மகளிரணியினரை, போலீசார் மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து ஓடினர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சமீபத்தில் சோதனையிட்ட அமலாக்கத் துறையினர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதைக் கண்டறிந்தனர்; அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இப்படி ஊழலில் ஊறித் திளைக்கும் டாஸ்மாக் நிறுவனத்தைக் கண்டித்து, டாஸ்மாக் கடைகள்தோறும் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை அறிவித்தார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
அதன்படி, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டப்போவதாக, ராசிபுரம் நகர பா.ஜ., மகளிரணியினர் அறிவித்திருந்தனர். இதற்காக, நேற்று மதியம் 12:30 மணிக்கு மகளிரணியைச் சேர்ந்த பலர், ராசிபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் இருக்கும் டாஸ்மாக் கடை நோக்கி வந்தனர்.
இதை அறிந்து, அங்கு வந்த ராசிபுரம் போலீசார், 'இப்படி போராடுவோர் மீது, நேற்று வரை வழக்கு மட்டுமே போடச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. ஆனால், இன்று கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். வாகனம் தயாராக இருக்கிறது. இன்று கைது செய்யப்பட்டால், சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் கட்டாயம் ஜெயிலுக்குள் இருந்தாக வேண்டும். ஜாமினும் அவ்வளவு எளிதில் கிடைக்காது; வசதி எப்படி?' என போராட வந்தோரிடம் கேட்டுள்ளனர்.
இதைக் கேட்ட பா.ஜ., மகளிரணியினர், 'போராட்டம் வாபஸ்' என கூறிவிட்டு, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினர்.




