புது கால்வாய் தோண்டுவதை கண்டித்து படப்பையில் பகுதிவாசிகள் சாலை மறியல்

படப்பை, வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே கரசங்கால் பகுதியில் உள்ள ரூபி அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பை ஓட்டி புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை, பொதுப்பணி துறையினர் நேற்று துவங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ஏற்கனவே மழை நீர் வடிகால் உள்ளது. இந்த கால்வாயை தனியார் நபர் மூடி வீட்டுமனைகள் அமைக்க உள்ளார்.

இதற்காக ஏற்கனவே உள்ள பழைய கால்வாயை மூடிவிட்டு, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பை ஓட்டி புதிய கால்வாய் தோண்டுகின்றனர். புதிய கால்வாய் அமைந்தால், மண் அரிப்பு ஏற்பட்டு கட்டடம் சேதமாகும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பகுதிவாசிகளின் திடீர் மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement