லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை பிறழ்சாட்சியாக மாறிய புகார் தாரர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை, வேளச்சேரி தண்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர் முருகன்; கட்டட கான்டிராக்டர். இவர், கடந்த 2008ல், வேளச்சேரி 7வது பிரதான சாலையில், புதிதாக கட்டிய வீட்டிற்கு இரண்டு புதிய மின் இணைப்பு கேட்டு, வேளச்சேரி மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, மின் இணைப்பு வழங்க இளநிலை பொறியாளர் வெங்கடேசன் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு தன்னால் இவ்வளவு தொகையை தர இயலாது என முருகன் கூறியதைத் தொடர்ந்து, 5,000 ரூபாய் கொடுக்கும்படி கூறிய வெங்கடேசன், முன் பணமாக 2,000 ரூபாய் கேட்டுள்ளார்.

இது குறித்து, முருகன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி, லஞ்ச பணத்தை முருகன் கொடுத்தபோது, அதை பெற்றுக்கொண்ட வெங்கடேசனை, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் புகார்தாரரான முருகன், சம்பவம் குறித்து தெளிவாக சாட்சியம் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை காப்பாற்றும் நோக்கில், குறுக்கு விசாரணையின் போது பிறழ்சாட்சியாக மாறி உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், புகார்தாரர் செயல்பட்டிருப்பது தெரிகிறது. எனவே, பொய் சாட்சி அளித்ததற்காக, புகார்தாரர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement