படகுகளுக்கான ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் இல்லை மீன்வளத்துறை விளக்கம்

சென்னை, படகுகளுக்கான உரிமம் புதுப்பித்தல், படகு பெயர் மாற்றம் செய்தல், புதிய படகு பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை தாமதமின்றி செயல்படுத்தி வருவதாக, தமிழக மீன்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நம் நாளிதழில் வெளியனான செய்திக்கு, மீன்வளத்துறை வெளியிட்ட விளக்கம்:

சென்னை மீன்வளத்துறை சார்பில், எண்ணுார் முதல் திருவான்மியூர் வரை உள்ள கிராமங்களில் பதிவு செய்யப்பட்ட, 2,374 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள்; 783 விசைப் படகுகளுக்கான உரிமம் புதுப்பித்து வழங்குவது; படகு பெயர் மாற்றம் செய்தல்; புதிய படகு பதிவு செய்தல் என, அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும், இந்த அலுவலகம் வாயிலாக, எந்தவித தாமதமும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், படகுகளுக்கான ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த நாஞ்சில் ரவி என்பவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

அப்பாவி மீனவர்களை வஞ்சிக்கும் பொருட்டு, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி மிரட்டுவது, வங்கி கடன் வாங்கி தருவதாக மீனவர்களை ஏமாற்றி பண மோசடி செய்வது என, இவர் மீது காவல் துறை மற்றும் மீன்வளத்துறையில் புகார்கள் விசாரணையில் உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement