வட்ட வழங்கல் தாசில்தார் அரசு ஜீப் பழுது ரேஷன் கடைகளில் ஆய்வு பணி சுணக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட 190 ரேஷன் கடைகள் வாயிலாக, 1 லட்சத்து, 23,450 கார்டுதாரர்களுக்கு கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப, அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தாசில்தாருக்கு அரசு சார்பில், ஜீப் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட்ட வழங்கல் தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு ஜீப், ஒராண்டிற்கு முன் பழுது ஏற்பட்டது. பழுதடைந்த வாகனத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வட்ட வழங்கல் தாசில்தாருக்கு வழங்கப்பட்ட ஜீப், தாலுகா அலுவலகம் பின்புறம் ஓரங்கட்டப்பட்டு துருப்பிடித்து வீணாகி வருகிறது.

மழை, வெயில், புயல் என, பேரிடர் காலங்களில், எந்தவித தடையுமின்றி சென்று ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என, ஆய்வு செய்யவும், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்களுக்கும், ஆய்வு கூட்டங்களுக்கும் அரசு வழங்கிய ஜீப் இல்லாததால், காஞ்சிபுரம் வட்ட வழங்கல் தாசில்தார், இருசக்கர வாகனத்தில் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால், தாலுகாவில் உள்ள 190 ரேஷன் கடைகளிலும், வட்ட வழங்கல் தாசில்தார், ஆய்வு செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

எனவே, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் வட்ட வழங்கல் தாசில்தாரின் ஜீப்பை பழுது நீக்கம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement