அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து

ஜகர்தா : இந்தோனேஷியாவில் லெவோடோபி லகி லகி மலையில் அடுத்தடுத்து மூன்று முறை எரிமலை குழம்பு வெடித்து சிதறியதால் மக்கள் பீதியடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தென் மத்திய பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் அமைந்துள்ளது புளோரஸ் தீவு. இந்த மாகாணத்தில் கடந்த ஏழு நாட்களாக நுாற்றுக்கணக்கான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், எரிமலை வெடிப்புக்கான அறிகுறிகளும் தெரிந்தன. இந்த நிலையில் நேற்று திடீரென எரிமலை வெடித்து சிதறியது.


தொடர்ந்து நேற்று வரை அடுத்தடுத்து மூன்று முறை எரிமலை வெடித்ததால் மக்கள் பீதியடைந்தனர். அப்போது சாம்பல் படலம் 26,000 அடி உயரத்துக்கு உமிழப்பட்டது.


எரிமலை வெடிப்பையொட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலிதீவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மற்ற உள்ளூர், சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பு வெளியேறும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement