கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்த பள்ளி மாணவன்: ஜாகிர் உசேன் கொலையில் அதிர்ச்சி!

12

நெல்லை; நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் பிஜிலி கொலையில், கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்த பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


@1brநெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வுபெற்ற எஸ்.ஐ. அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் அவர் முத்தவல்லியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த ஜாகிர் உசேனை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், ஜாகிர் உசேனுக்கும் இடையே இருந்த நிலத்தகராறு கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக், கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உறவினரான பள்ளி மாணவன் ஒருவன் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் டவுனில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார்.


அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று ஜாகிர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்துவிட்டு புறப்படுவதை கொலையாளிகளுக்கு மொபைல்போன் மூலமாக தெரிவித்தது தெரிய வந்தது.


இதைத் தொடர்ந்து அந்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக்கின் மனைவி நூர்நிஷா இன்னமும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement