கடப்பாரையுடன் சென்று வரி வசூல்; கடலுார் மாநகராட்சியில் அடாவடி!

2

கடலுார்: கடப்பாரை உடன் வீட்டு வரி வசூலுக்கு செல்லும் கடலூர் மாநகராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் நிதி சிக்கலை தீர்க்கும் விதமாக பல கோடி ரூபாய் வரிபாக்கியை வசூல் செய்வதில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை கடப்பாறையுடன் சென்று மாநகராட்சி ஊழியர்கள் துண்டிப்பதும் நடைபெற்று வருகிறது.


வரி செலுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் அந்த அவகாசத்தை மாநகராட்சி ஊழியர்கள் தர மறுப்பதாகவும், முன்கூட்டியே செலுத்தும்படி வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த வரி பாக்கி இருப்பவர்கள் வீட்டுக்கு மட்டுமே கடப்பாரையுடன் சென்று ஊழியர்கள் மிரட்டல் விடுகின்றனர். ஆனால் பல லட்ச ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு செல்வதில்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.



கடலூரில் மாநகராட்சி ஊழியர்கள் கடப்பாரையுடன் ஒரு வீட்டிற்கு சென்று வரி கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், 'நாங்கள் எதுவும் வரி பாக்கி வைத்திருக்கவில்லை இந்த தவணை மட்டுமே கட்ட வேண்டும் அதற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் உள்ளது. எங்கள் வீட்டுக்காரர் வெளியே சென்று உள்ளார் அவர் வந்தவுடன் நான் கட்டுகிறேன்' என்று வீட்டு உரிமையாளரான பெண்மணி கூறுகிறார்.


ஆனால் மாநகராட்சி ஊழியர்கள், 'அதில் காதில் வாங்காமல் உடனடியாக வரி கட்ட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்' என பேசும் வீடியோ கடலுாரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement