வெற்றியுடன் துவக்குமா சென்னை: மும்பை அணியுடன் மோதல்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு அசுர பலத்தில் உள்ளது. அனுபவ 'ஸ்பின் கிங்' தமிழகத்தின் அஷ்வின் மிரட்டலாம். பிரிமியர் அரங்கில் 180 விக்கெட் (212 போட்டி) வீழ்த்தியுள்ளார். ஜடேஜா, நுார் அகமது, ஷ்ரேயஸ் கோபால், தீபக் ஹூடா போன்றோரும் 'சுழல்' ஜாலம் காட்டலாம்.
மீண்டும் 'தல' தோனி: தோனி 43, மீண்டும் களமிறங்குவது பலம். கடைசி கட்டத்தில் விளாச காத்திருக்கிறார். துவக்கத்தில் கேப்டன் ருதுராஜ் உடன் ரச்சின் ரவிந்திரா அல்லது கான்வே வரலாம். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய நியூசிலாந்தின் ரச்சின் (4 போட்டி, 263 ரன்) தொடர் நாயகன் விருது வென்றார். இவரது அதிரடி தொடரலாம். 'மிடில் ஆர்டரில்' ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே கைகொடுக்கலாம். 'வேகத்துக்கு' பதிரானா உள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான 'ரன் ரேட்' காரணமாக 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும்.


பும்ரா பாதிப்பு: மும்பை அணி 'வேகப்புயல்' பும்ரா (காயம்), ஹர்திக் பாண்ட்யா (கடந்த ஆண்டு தாமதமாக பந்துவீசியதால், ஒரு போட்டி தடை) இல்லாமல் களமிறங்குகிறது. 'டெத் ஓவரில்' பும்ரா இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது, அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கடைசி இடம் பிடித்தது. இன்றைய போட்டியில் பாண்ட்யாவுக்கு பதில் தற்காலிக கேப்டனாக சூர்யகுமார் களமிறங்க உள்ளார். 360 'டிகிரி'யில் சுழன்று சூறாவளியாக ரன் சேர்க்கலாம். பிரிமியர் அரங்கில் 3594 ரன் (150 போட்டி) எடுத்துள்ளார்.


வருகிறார் சான்ட்னர்: ஐந்து கோப்பை வென்ற மும்பை அணிக்கு துவக்கத்தில் ரோகித் சர்மா, ரிக்கிள்டன் (தென் ஆப்ரிக்கா) அசத்தலாம். 'மிடில் ஆர்டரில்' திலக் வர்மா முத்திரை பதிக்கலாம். 'வேகத்தில்' மிரட்ட பவுல்ட், தீபக் சகார் டாப்ளே, கார்பின் பாஷ் உள்ளனர். சென்னை அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவம் பெற்ற சான்ட்னர் 'சுழலில்' சாதிக்கலாம்.

யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 37 போட்டிகளில் மோதின. மும்பை 20, சென்னை 17ல் வென்றன. சேப்பாக்கத்தில் 8 போட்டிகளில் மோதின. சென்னை 3, மும்பை 5ல் வென்றன. கடைசியாக மோதிய 5 போட்டியில் நான்கில் சென்னை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

மழை வருமா
சென்னையில் இன்று போட்டி நடக்கும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
* சேப்பாக்கம் ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருக்கும்

ஹெட் நம்பிக்கை
ஐதராபாத்தில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக், கிளாசன், ஷமி, ஜாம்பா என நட்சத்திர வீரர்களுடன் ஐதராபாத் வலுவாக உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு விரல் காயத்தால் அவதிப்படும் சாம்சன் 'இம்பேக்ட்' வீரராக வரலாம். இவருக்கு பதில் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்கிறார். ஜெய்ஸ்வால், ஹெட்மெயர், சந்தீப் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் கைகொடுக்கலாம்.

Advertisement