கிணத்துக்கடவு -- திருப்பூருக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு --- திருப்பூர் இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவில் இருந்து, திருப்பூருக்கு நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில், சிலர் கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருப்பூருக்கும், சிலர் கோவை சென்று அங்கிருந்து திருப்பூருக்கு செல்கின்றனர்.

கிணத்துக்கடவிலிருந்து திருப்பூருக்கு தனியார் பேருந்து மட்டுமே உள்ளது. அதுவும், காலை, 9:00 மணிக்கு மேல் இயக்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு முன், கிணத்துக்கடவில் இருந்து திருப்பூர் செல்ல அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ், கிணத்துக்கடவிலிருந்து திருப்பூருக்கு தினமும் 4 'டிரிப்' சென்று வந்தது. அந்த பஸ்சில் அதிகளவில் கூட்டமும் இருந்தது.

கொரோனா கால கட்டத்தில் அந்த பஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், தற்போது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

மக்கள் கூறியதாவது:

கிணத்துக்கடவு -- திருப்பூர் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். தற்போது, கோவை, நெகமம் அல்லது பொள்ளாச்சி சென்று, திருப்பூர் செல்லும் நிலை உள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் முக்கிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, திருப்பூருக்கு மீண்டும் பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement