போதை மகனை போலீசில் பிடித்து கொடுத்த தாய் குடும்பத்துடன் கொல்வதாக மிரட்டியதால் ஆவேசம்

கோழிக்கோடு: கேரளாவில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டிய, போதைக்கு அடிமையான மகனை, பெற்ற தாயே போலீசில் பிடித்துக் கொடுத்தார்.
கேரளாவின் கோழிக் கோடு மாவட்டத்தின் ஏலாத்துாரைச் சேர்ந்த ராகுல், 26, போதைக்கு அடிமையானவர். தாய் மினி மற்றும் பாட்டியுடன் வசிக்கிறார். இவரது சகோதரி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
மிரட்டல்
ராகுல், போதை தலைக்கேறி வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், தன் 68 வயது பாட்டியின் மண்டையையும் உடைத்தார்
தடுக்க வந்த தாய் மினியை பார்த்து, குடும்பத்தில் அனைவரையும் கொல்லப்போவதாகவும், விரைவில் வெளிநாட்டில் இருந்து வரும் சகோதரியையும் குடும்பத்துடன் தீர்த்துக்கட்டப் போவதாகவும் மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மினி, சொந்த மகன் என்று கூட பார்க்காமல், மனதை கல்லாக்கிக் கொண்டு, போலீசில் மகனை பிடித்துக் கொடுத்தார். மகன் மீது கொலை மிரட்டல் புகாரையும் போலீசில் அளித்தார்.
இதுகுறித்து மினி கூறியதாவது:
ராகுலுக்கு, 13 வயதில் இருந்தே போதைப்பழக்கம் இருந்துள்ளது. எங்களுக்கு 19 வயதில் தான் தெரிந்தது. உடனே, டாக்டர்களிடம் அழைத்துச் சென்றோம். போதை மறுவாழ்வு மையத்திலும் சேர்த்தோம்.
லேசாக மாற்றம் தெரியும்; ஆனால், மறுபடியும் போதைக்கு அடிமையானான். வீட்டில் இருந்த குழந்தைக்கு போதை சாக்லேட்டை அவன் கொடுத்தபோது, நான் தடுத்ததால், என் மீது ஆக்ரோஷமானான்.
ஏமாறப்போவதில்லை
ஒருமுறை குடிக்கப் பணம் கொடுக்காததால், வீட்டில் இருந்த குழந்தையை ஆத்திரத்தில் அடித்தான். இதற்காக போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, என்னிடம் அழுது புலம்பி மீண்டும் வெளியில் வந்தான். இந்த முறை அதுபோன்று நடித்தாலும் நான் ஏமாறப்போவதில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல் மீது திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தார்.







