தடுப்பு இல்லாமல் சாலை பணி நெடுஞ்சாலை துறை அலட்சியம்

சூணாம்பேடு:செய்யூர் அடுத்த நல்லுார் பகுதியில் இருந்து வெடால் வழியாக வில்லிப்பாக்கம் செல்லும் 16 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த சாலையை வெடால், இரும்பேடு, ஒத்திவிளாகம், கடுக்கலுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் பள்ளி குழந்தைகள், விவசாயிகள், பொதுமக்கள் என தினசரி ஏராளமானோர் கடந்து செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது.

இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொண்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வில்லிப்பாக்கத்தில் இருந்து கடுக்கலுார் வரை 3.2 கி.மீ., துாரத்திற்கு, ஒருவழிப்பாதையாக உள்ள சாலையை, இருவழிப் பாதையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து, தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டு, சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

விரிவாக்கத்திற்காக சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில், தடுப்பு இல்லாமல் உள்ளது.

மேலும், சிறுபாலங்கள் அமைக்கப்படும் இடங்களில் எந்தவித எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்படாமல், கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தும், சிறுபாலங்களின் மீது மோதியும் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்புகள் அமைத்து, சாலை பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement