கல்குவாரி அமைப்பதை கண்டித்து மாம்புதுாரினர் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகை

உத்திரமேரூர்,உத்திரமேரூர் ஒன்றியம், சின்னாளம்பாடி ஊராட்சி, மாம்புதூர் கிராமத்தில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.

இந்நிலையில், பெரிய ஏரிக்கு அருகே தனி நபர் ஒருவரின் கல் குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கல் குவாரிக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாமல் உள்ளது.

இதனால், பெரிய ஏரியில் இருந்து செல்லும் பாசன கால்வாய் மற்றும் சமூக காடுகள் வழியே, பாதை அமைக்க, ஒரு மாதத்திற்கு முன் முயற்சி நடந்தது. அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது, குவாரி அமைக்கும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், மாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், கல் குவாரி அமைக்கும் பணியை தடுக்கக்கோரி உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் துறை அதிகாரிகளின் பேச்சுக்கு பின், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

மாம்புதூரில் கல் குவாரி அமைப்பதால் விவசாயம் அழிந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். நீர்நிலை மற்றும் சமூக காடுகள் வழியே, கல் குவாரிக்கு பாதை அமைக்கும் முயற்சியை, மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement