தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?

சென்னை: தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க.,வை உள்ளே இழுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய காய் நகர்த்தலை, தி.மு.க., மேலிடம் துவங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முயற்சி பலித்தால், வரும் சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணி கணிசமான ஓட்டுகளை அள்ள முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் காங்., - வி.சி., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ம.ம.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு உதிரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியை தக்க வைத்தாலே, ஓட்டு சதவீதம் அடிப்படையில் வெற்றி பெற்று விடலாம் என்பது தி.மு.க., மேலிடத்தின் கணக்கு.
மனக்கசப்பு
அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி பலவீனமாக உள்ளதும், ராஜ்யசபா 'சீட்' விவகாரத்தில் தே.மு.தி.மு.க.,வுக்கும், அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் பா.ஜ.,வை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் உறுதியான முடிவெடுக்காததும், தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றி கணக்கிற்கு சாதகமாக உள்ளன.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், பொது நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, சட்டசபையிலும் தி.மு.க., அரசை விமர்சித்து, கருத்துகளை பதிவு செய்ய துவங்கி உள்ளார்.
ஏற்கனவே, ஆளும் கூட்டணிக்கு எதிராக திருமாவளவன் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், வேல்முருகனின் செயல்பாடு, கூட்டணிக்கு மேலும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அவமதித்து விட்டதாகக் கூறி, வேல்முருகன் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து, வேல்முருகனின் த.வா.க., வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அதே நேரத்தில் பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான சாதகமான சூழலும் உருவாகிஉள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஜாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தீவிர போராட்டம் நடத்தவும் அக்கட்சி தயாராகி வந்தது.
ஆனால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் கூறிய அறிவுரையை தொடர்ந்து, இந்த விவகாரங்களில் பா.ம.க., கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளது.
ரசித்தது
தலைமை செயலகத்தில் நடந்த லோக்சபா தொகுதிகள் மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். இதை, தி.மு.க., தலைமை வெகுவாக ரசித்தது.
எனவே, கூட்டணியில் குடைச்சல் ஏற்படுத்தி வரும் வேல்முருகனை வெளியேற்றி விட்டு, பா.ம.க.,வை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய பேச்சும் நடப்பதாக தெரிகிறது.
மேலும், நடிகர் விஜயின் அரசியல் வருகையால், ஆதிதிராவிட மக்களின் ஓட்டு வங்கி, அவரது பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. பா.ம.க., வந்தால், கூட்டணியில் வி.சி., கட்சி இருக்க முடியாது.
கைகொடுக்கும்
அதற்கு பதிலாக, தே.மு.தி.க.,வில் உள்ள ஆதிதிராவிடர் ஓட்டு வங்கியை பயன்படுத்த, அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
தே.மு.தி.க.,வையும், பா.ம.க.,வையும் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றோரை வழிக்கு கொண்டு வர, இந்த வியூகம் கைகொடுக்கும் என்றும் கட்சி தலைமை நம்புகிறது.
தி.மு.க., மேலிடம் நினைப்பது போல, கூட்டணியில் பா.ம.க., இணையுமானால், வட மாவட்ட வன்னியர்கள் மத்தியில் வலுவாக இருக்கும் அக்கட்சியின் ஓட்டுகளை முழுமையாக அள்ளி, பெரு வெற்றி பெற முடியும். இந்த அடிப்படையில் திட்டமிட்டுள்ள தி.மு.க., மேலிடம் காய்களை நகர்த்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.









மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: ஸ்ரேயாஸ் அரைசதம்: பஞ்சாப் அணி 15 ஓவரில் 156 /4 ரன்
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை