'டவுட்' தனபாலு

5

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில், புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கையில் உள்ள, 'இல்லம் தேடி கல்வி'யை செயல்படுத்துகின்றனர். கடனில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், எந்த தகுதியும் இல்லாத தமிழகம் தான், 'எல்லாவற்றிலும் முன்னணி' என, முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போதைய ஆட்சி அகற்றப்படும். விரைவில் துாய ஆட்சி தமிழகத்தில் அமையும்.


டவுட் தனபாலு: தமிழகத்தில் துாய ஆட்சி அமையும்னு சொல்றீங்களே... 'அந்த துாய ஆட்சி அமையுறதுக்கு அணில் மாதிரி, நாம் தமிழர் கட்சி இருக்கும்'னு எங்கயும் சொல்ல மாட்டேங்குறீங்களே... 'தனித்துப் போட்டி' என்ற உங்க பிடிவாதம், தி.மு.க., அரசுக்கு அனுகூலமாக அமையுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

பத்திரிகை செய்தி: மாவட்ட பதவிகளில் உதயநிதி ஆதரவாளர்கள் திணிக்கப்படுவதால், தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. ஆட்சி, கட்சி என, இரட்டை குதிரையில் சவாரி செய்யும் துணை முதல்வரால், உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க முடியவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது.

டவுட் தனபாலு:
அதிவேகம் ஆபத்து என்பது வாகனங்களுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் பொருந்தும்... இன்றைய முதல்வர் ஸ்டாலின், 40 - 45 வருஷங்களா கட்சிக்கு கடுமையாக உழைத்து, படிப்படியாகவே முன்னேறி வந்தார்... அதனால, அவரை எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க... ஆனா, உதயநிதி மூணே வருஷத்துல எட்டிய உயரங்களை, சீனியர்களால ஜீரணிக்க முடியாததே, இந்த பிரச்னைகளுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!



பத்திரிகை செய்தி:
மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 36 பைசா உயர்த்தி, கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு, 'ஷாக்' கொடுத்து உள்ளது. தற்போது, 1 யூனிட் மின் கட்டணம், 5 ரூபாய் 90 காசாக உள்ளது. யூனிட்டிற்கு, 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பதன் வாயிலாக, 6 ரூபாய், 26 பைசாவாக உயர்ந்து உள்ளது. இந்த கட்டண உயர்வு, வரும் ஏப்ரல், 1 முதல் அமலுக்கு வருகிறது.

டவுட் தனபாலு: சரியா போச்சு... நாளைக்கு தமிழகத்துல மின் கட்டணத்தை ஏத்தினாலும், கர்நாடகா அரசு ஏத்திய கட்டணங்களை உதாரணம் காட்டி, தமிழக அரசு, 'சால்ஜாப்பு' சொல்லிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement