கழிவுநீரோடை குழியில் புதைத்து கான்கிரீட் கலவையால் மூடி பங்குதாரர் கொலை; கேட்டரிங் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது

மூணாறு : இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கூலிப்படையால் பங்குதாரரை கொலை செய்து கழிவுநீரோடையில் குழி தோண்டி புதைத்து கான்கிரீட் கலவையால் மூடிய கேட்டரிங் உரிமையாளர் ஜோமோன் ஜோசப் 51, கூலிப்படையைச் சேர்ந்த எர்ணாகுளம் முகமதுஅஸ்லாம் 36, ஆஷிக்ஜான்சன் 27, கண்ணுார் ஜோமின்குரியன் 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடுபுழா அருகே சுங்கத்தைச் சேர்ந்தவர் பிஜூ ஜோசப் 50. இவர் மண் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரி, ஒர்க் ஷாப் வைத்து தொழில் செய்து வந்தார். அவருக்கும் கலயந்தானி பகுதியில் கேட்டரிங் உரிமையாளர் ஜோமோன் ஜோசப்புக்கும் 51, பழக்கம் ஏற்பட்டது. பின் இருவரும் கூட்டாக தொழில் செய்தனர்.
சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தொழில் செய்வதிலிருந்து பிரிந்தனர். ஜோமோனுக்கு பிஜூஜோசப் ரூ.60 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து தொடுபுழா போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் பணம் தருவதாக பிஜூஜோசப் ஒப்புக்கொண்டார். பின் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தினார்.
இதற்கிடையே கேட்டரிங் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஜோமோன் பண நெருக்கடிக்கு ஆளானார். அதனால் பிஜூஜோசப்பை மிரட்டி பணத்தை வாங்க திட்டமிட்டார். அதற்கு கூலிப்படையினரை தயார் செய்தார். அவர்கள் ரூ.60 லட்சத்தை வாங்கி கொடுத்தால் ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறினர். இதற்காக அவர்களுக்கு ரூ.12 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார்.
கடத்தல்
பிஜூஜோசப் தினமும் அதிகாலை வெளியில் செல்வதை கூலிப்படையினர் நோட்டமிட்டனர். மார்ச் 20ல் அதிகாலை டூவீலரில் சென்ற பிஜூஜோசப்பை வேனில் கடத்தி பலமாக தாக்கினர். இதில் பிஜூஜோசப் இறந்தார். அவரது உடலை கலயந்தானி பகுதியில் உள்ள ஜோமோனுக்கு சொந்தமான கேட்டரிங் மைய கோடவுன் கழிவு நீர் ஓடையில் குழிதோண்டி புதைத்து, கான்கிரீட் கலவையால் மூடினர்.
மனைவி புகார்
பிஜூஜோசப்பை காணவில்லை என அவரது மனைவி மஞ்சு தொடுபுழா போலீசில் புகார் அளித்தார். இடுக்கி மாவட்ட எஸ்.பி., விஷ்ணுபிரதீப் உத்தரவுபடி டி.எஸ்.பி., இம்மானுவேல், இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணுகுமார், ஷோல்ஜிமோன், எஸ்.ஐ., ரோயி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து ஜோமோன்ஜோசப், கூலிப்படையைச் சேர்ந்த எர்ணாகுளம் முகமதுஅஸ்லாம், ஆஷிக்ஜான்சன், கண்ணுார் ஜோமின்குரியனை கைது செய்தனர்.
ஆஷிக் ஜான்சனை குண்டர் தடுப்பு சட்டத்தில் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் வடக்குக்கரை போலீசார் மார்ச் 20 மாலை கைது செய்தனர். ஆனால் அவர் பிஜூஜோசப் கொலை குறித்து அப்போது எதுவும் கூறவில்லை.
மேலும் இரு முறை கூலிப்படையினரால் பிஜூஜோசப்பை கடத்த திட்டமிட்டு தோல்வியில் முடிந்த நிலையில் மூன்றாவது முறையாக அவரை கடத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: ஸ்ரேயாஸ் அரைசதம்: பஞ்சாப் அணி 15 ஓவரில் 156 /4 ரன்
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை