ஆளுங்கட்சி கவுன்சிலர் வீட்டுக்கு ஆண்டு வரி ரூ.211 தான்!

4

''கிட்டத்தட்ட, 15,000 ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பும்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார்,

குப்பண்ணா.

''துாத்துக்குடி மாநகராட்சியில், 10 மண்டலங்கள் இருக்கு... குப்பை அள்ளுற தனியார் நிறுவனத்துல, 1,500 துாய்மை பணியாளர்கள் இருக்காங்க பா...

''குப்பைல கிடைக்கிற பிளாஸ்டிக், பழைய இரும்புகளை எல்லாம், இந்த பணியாளர்கள் பழைய இரும்பு கடையில எடைக்கு போடுவாங்க...

''ஆனா, மாநகராட்சி யின் முக்கிய புள்ளி, 'நான் சொல்ற கடையில் தான் எடைக்கு போடணும்... அதுல கிடைக்கிற தொகையிலும் குறிப்பிட்ட சதவீதம் எனக்கு கமிஷன் வந்துடணும்'னு கறார் காட்டுறாரு பா...

''இந்த கமிஷன் வசூலுக்காகவே, தன் சார்புல மண்டல வாரியா ஏஜன்ட்களையும் நியமிச்சிருக்காரு...

''ஏற்கனவே, துாய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், சீருடை, போனஸ், பி.எப்., சிலிப், இ.எஸ்.ஐ., கார்டு எல்லாம் தரணும்னு, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் சார்புல கோரிக்கை வச்சும், அரசு கண்டுக்கல பா...

''இதனால கடுப்புல இருக்கிறவங்களிடம் கமிஷன் கேட்டும் நெருக்கடி தர்றதால, துாய்மை பணியாளர்கள் மற்றும் இவங்க குடும்பத்தினர்னு, 15,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு எதிராக போயிடும்னு சொல்றாங்க...'' என்றார், அன்வர்பாய்.

''பீர் விற்பனையை துாக்கி நிறுத்தப் போராடு றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்டத்தில், 225 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கு... வழக்கமாகவே இங்க பீர் விற்பனை அதிகமா இருக்கும்... ஆனா, சமீப காலமா பீர் விற்பனை, 'மளமள'ன்னு கீழே போயிடுச்சுங்க...

''பீர் விற்பனையை அதிகரிக்க என்ன பண்றதுன்னு, மாவட்ட அதிகாரி ரூம் போட்டு யோசனை செஞ்சிருக்காரு...

''கடைசியா வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகள்ல வழக்கமா வாங்குற பீர் பெட்டிகளை விட அதிகமா வாங்கும்படி சூப்பர்வைசர்களிடம் சொல்லியிருக்காருங்க...

''அதே நேரம், அந்த பீர் பெட்டிகள் எல்லாம் விற்றாலும், விற்காம இருந்தாலும், அதுக்குரிய தொகையை கட்டும்படி யும் சொல்லிட்டாருங்க...

''முதல்ல தயங்கிய சூப்பர்வைசர்கள், ஊழியர்கள் அப்புறமா பணத்தை கட்டிட்டு, விற்காத பீர் பாட்டில்களை வெளி மார்க்கெட்டுல கூடுதல் விலைக்கு விற்று, 'எக்ஸ்ட்ரா' வருமானம் பார்க்கிறாங்க...

''அதிகாரி போட்ட பிளான், டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதலா சம்பாதிக்க புது வழியை ஏற்படுத்திக் குடுத்துடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''காஞ்சிபுரம் மாநகராட்சி, தி.மு.க., வசம் தான் இருக்கு... இங்க இருக்கிற ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தர், நகரின் மையப் பகுதியில, பிரமாண்டமா வீடு கட்டி குடியிருக்காரு வே...

''நவரச நடிகர் பெயர் கொண்ட இவரது ஆயிரக்கணக்கான சதுர அடி வீட்டுக்கு, வெறும், 211 ரூபாயை சொத்து வரியா மாநகராட்சி நிர்ணயம் பண்ணியிருக்கு... 'சொத்து வரி நிர்ணயத்துல ஏகப்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் நடக்கிறதுக்கு இது ஒண்ணே சாட்சி'ன்னு சொல்லி, கவுன்சிலரின் சொத்து வரி பில்லை, 'வாட்ஸாப்'புல பலரும் பரப்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''அதையும் அவா, பல வருஷங்களா கட்டாம விட்டாலும், கண்டுக்க மாட்டா ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement