காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டில் ரூ.22.5 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சொத்து வரி விதிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், 34,000 கட்டடங்களுக்கு மேலாக, குடியிருப்பு மற்றும் வணிக ரீதியிலான சொத்து வரி விதிக்கப்பட்டு, அவை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள கட்டடங்களுக்கு, 24 கோடி ரூபாய் சொத்து வரி, ஆண்டுதோறும் வருவாயாக கிடைத்து வந்தது. மாநகராட்சி நிர்வாகம் சில மாதங்கள் முன்பாக, வணிக கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை தீவிரபடுத்தியது.
குடியிருப்பு கட்டடத்தில், வணிக ரீதியில் இயங்கி வந்த, 1,470 கட்டடங்களுக்கு, 1.2 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்யப்பட்டன. அதேபோல, புதிய வரி விதிப்பு, அரசு கட்டடங்களுக்கு வரி விதிப்பு என, மொத்தம் 5 கோடி ரூபாய் புதிதாக வரி விதிப்பு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டுகளில், விதிக்கப்பட்டு வந்த 24 கோடி ரூபாயுடன், புதியதாக விதிக்கப்பட்ட 5 கோடி ரூபாய் என, 29 கோடி ரூபாய் சொத்து வரி இந்த ஆண்டு முதல் வசூலிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், 2024- - 25ம் ஆண்டுக்கான, மார்ச் மாதம் துவக்கம் வரையிலான கணக்கெடுப்பின்படி, 22.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாக, கமிஷனர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு, 22.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில், மேலும் ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என, அவர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டில் வசூலிக்கப்பபட்ட தொகையை காட்டிலும், இந்தாண்டு அதிகமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.