அரசு ஊழியர் ஓட்டு வங்கியை இழந்து விட்டார் ஸ்டாலின்: சொல்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு

47


உடுமலை: 'தி.மு.க., தலைவராக இருந்து, கருணாநிதி பெற்று வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்,' என, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.


உடுமலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) அகில இந்திய செயலாளர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் சரண் விடுப்பும், 2026 முதல் நடைமுறை என அறிவித்துள்ளது, ஏமாற்றும் செயலாகும்.



தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் வாக்குறுதியாகவும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என சத்தியபிரமாணமாக தெரிவித்தார். அகில இந்திய அளவில், ஏழு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தாமல் சாமார்த்தியமாக பேசிவருகிறார். 6.5 லட்சம் அரசு ஊழியர்களின், 1.5 கோடி குடும்ப வாக்காளர்களை வஞ்சிக்கிறார்.


கடந்த, 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கவில்லை; காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஆட்சி முடியும் தருவாயில், 40 ஆயிரம் பேரை நியமிப்பதாக வெற்று வாக்குறுதி அளிக்கின்றனர். தி,மு.க., தலைவர் கருணாநிதி வைத்திருந்த ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். ஏப்.,30க்குள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement