இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கும் இ.பி.எஸ்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் இ.பி.எஸ்; பங்கேற்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
முதல் முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது. அதை கருணாநிதி ஆட்சிக்கு வந்து, அந்த ரத்தை ரத்து செய்து பழைய படி மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.
உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார். வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க முதல்முதலாக மானியம் வழங்கினார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கினார். உருது அகாடமி தொடங்கினார். காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கி, நிதி ஒதுக்கினார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 3..5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுத்தார்.
காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் வழங்கினார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கருணாநிதியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று நினைத்தது இல்லை. சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.
அண்மையில் கூட, தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். தமிழ்நாடு ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளுக்கு தலா, 25,000 ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து 11,364 ஹஜ் பயணிகள் புனித பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். இதற்காக ரூ.24.56 கோடி அரசு மானியமாக வழங்கி இருக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், 4 ஆண்டுகளில் 31,625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிறுபான்மையின மக்கள் பயன்பெற, பல்வேறு நலத்திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி வழங்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க 76,663 மாணவியருக்கு 4.82 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியது. எனவே மாநில அரசு இந்தாண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய முஸ்லிம் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி கொண்டிருக்கிறது.
வக்பு வாரியம் மூலமாக வழங்கக்கூடிய 12 கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 1159 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தொன்மையான தர்காக்கள், பள்ளி வாசல்களை புனரமைக்க இதுவரை 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 தர்காக்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல்கள் வரும்போது எல்லாம், இஸ்லாமியர்களை காக்கக்கூடிய அரணாக தி.மு.க., செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் வருந்ததக்க சூழல்கள் இருந்தாலும் நம் தமிழகத்தில் மத ரீதியிலான வன்முறைகள் ஏற்படாமல் காத்து வரும் அரசாக தி.மு.க., அரசு எப்போதும் இருந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க.
குடியுரிமை திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் அ.தி.மு.க., எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளும் பார்லிமென்டில் எதிர்த்து வாக்ளித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.
ஆனால் அன்றைக்கு முதல்வராக இருந்த இ.பி.எஸ்., என்ன கேட்டார். குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டீர்கள். இப்போது அவர் எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமிய விழாவில் போய் கலந்து கொள்கிறார்.
ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டு, அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்து கொள்கின்றனர். பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது மனித உரிமையை பறிக்கிறது என்றும் மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது தி.மு.க., தான்.
இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பேசும் பொருளாக ஆகி இருக்கிறது. சிறுபான்மையின மக்கள் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பா.ஜ., இதை கொண்டு வர பார்க்கிறது. அதையும் பார்லிமென்டில் எதிர்த்து தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறது.
ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். பா.ஜ.,வின் சதித்திட்டங்கள் நிறைவேற தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது.
உறுதியாக போராடுவோம். உங்களுக்கு எப்போதும் துணையாக நாங்கள் இருப்போம். இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, அவர்களுக்கு காவல் அரணாக விளங்குகிற இயக்கமாக தி.மு.க., எந்நாளும் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.










மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி