பால் வாங்க பெண்கள் வருவதே இல்லை; அமைச்சருக்கு கள நிலவரமே தெரியவில்லை: பால் முகவர்கள் கொதிப்பு

10


சென்னை: அதிகாலை பால் வாங்க வரும் பெண்களுக்கு, 'கல்ப்ரிட்ஸ்' தொல்லை உள்ளது என, அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'அதிகாலை பெண்கள் பால் வாங்க சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். அவர்கள் முகம் தெரியாததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், பால் பூத்களில், பால் விற்பனை நேரம் காலை 6:30 மணி முதல் 7:30 மணியாக மாற்றப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.


ஆவின் பால் விநியோக முறை குறித்து, அமைச்சர் தெரிந்து பேசுகிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறை செயலிழந்து உள்ளது என்ற ரீதியில் பேசி உள்ளார். இதை, முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டு கொள்ளாமல், மவுனமாக கடந்து சென்றது, அதிர்ச்சி அளிக்கிறது.


மாதாந்திர அட்டை வாயிலாக, ஆவின் பால் விநியோகம், சென்னையில் மட்டுமல்லாது, பெரும்பாலான மாவட்டங்களில், அதிகாலையிலேயே நிறைவடைந்துவிடும். நுகர்வோர் நேரடியாக பூத்துகளுக்கு சென்று வாங்காமல், வீடுகளுக்கு டெலிவரி செய்யும் பால் முகவர்களிடம், வாங்கிக் கொள்கின்றனர்.

தற்போது, பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அமைச்சர் பேச வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement