காங்கிரஸ் - பா.ஜ., கூட்டு சதி; அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி: ''ஆம் ஆத்மிக்கு எதிராக, காங்கிரஸ் - பா.ஜ., இரு கட்சிகளும் கூட்டு சதி செய்கின்றனர்,'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:பகத்சிங்கும், அம்பேத்கரும் எங்கள் வழிகாட்டிகள். எங்கள் வீடுகளிலும், டில்லி, பஞ்சாப் அரசு அலுவலகங்களிலும் அவர்களது படங்களை வைத்திருந்தோம். டில்லியில் புதிய அரசு பதவியேற்றதும் அவர்களது படங்களை அகற்றி விட்டு, அவர்கள் கட்சி தலைவர்கள் படங்களை மாட்டி விட்டனர்.
நாங்கள் பகத்சிங், அம்பேத்கர் படத்தை மாட்டியபோது, காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. காந்தி படத்தை வைக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் பா.ஜ., அந்த படங்களை அகற்றியபோது, காங்கிரஸ் எதுவும் பேசவில்லை. இதுவே, ஆம் ஆத்மிக்கு எதிரான பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டுச்சதியை வெளிப்படுத்துகிறது.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர்களின் ஒற்றை கனவு கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து தன் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான பல விஷயங்கள் இருந்தன. ஆனாலும், பிரிட்டீஷ் அரசு அந்த கடிதங்களை அவரது தோழர்களுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தது. ஆனால் நான் சிறையில் இருந்தபோது, அதிஷி தேசிய கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி, துணைநிலை கவர்னருக்கு கடிதம் அனுப்பினேன்.
சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதத்தை அனுப்பும்படி கூறினேன். ஆனால், அந்த கடிதம் கடைசி வரை துணைநிலை கவர்னரை சென்று சேரவில்லை. ஆனால், எனக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் தரப்பட்டது. இப்படி ஒரு கடிதம் எழுத எத்தனை தைரியம் என்று கேட்டிருந்தனர். கடிதம் எழுதும் சுதந்திரம் பகத் சிங்குக்கு இருந்தது. ஆனால், எனக்கு இரண்டு வரி கடிதம் எழுதக்கூட சுதந்திரம் இல்லை. நீங்கள் (பா.ஜ., ) பிரிட்டீஷாரை விட மோசமானவர்கள். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.






