கால்பந்து: இந்தியா-வங்கம் 'டிரா' * ஆசிய தகுதிச்சுற்றில் ஏமாற்றம்

ஷில்லாங்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் தரவரிசையில் 59 இடம் பின்தங்கிய வங்கதேசத்தை வீழ்த்த முடியாமல், 'டிரா' செய்து ஏமாற்றியது இந்திய அணி.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று நேற்று துவங்கியது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று ஷில்லாங்கில் (மேகாலயா) நடந்த முதல் போட்டியில், 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை எதிர்கொண்டது.
போட்டியின் 12வது நிமிடம் இந்திய கோல் கீப்பர் விஷால் கெய்த், பந்தை தவறுதலாக வங்கதேச வீரர் முகமது ரித்தாயிடம் அடித்தார். வாய்ப்பை பயன்படுத்தி அவர், பந்தை கோலாக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த சுபாசிஷ் தடுத்து, இந்திய அணியை காப்பாற்றினார்.
வங்கதேசம் 'வேகம்'
தொடர்ந்து வங்கதேச அணியினர் கோல் அடிக்கும் முயற்சியில் இறங்க, இந்திய வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். 24வது நிமிடத்தில் இந்தியாவின் ஆயுஷ் செத்ரியை 'பவுல்' செய்த வங்கதேச வீரர் மோஜிபருக்கு 'எல்லோ கார்டு' கிடைத்தது.
30 வது நிமிடம் இந்திய வீரர் உடாண்டா சிங் தலையால் முட்டி சக வீரர் பருக் சவுத்ரிக்கு கொடுத்தார். இதை எளிதாக கோலாக மாற்ற கிடைத்த வாய்ப்பை கோல் கீப்பரிடம் பந்தை அடித்து வீணாக்கினார் பருக்.
இந்தியா திணறல்
41வது நிமிடத்தில் வங்கதேசத்தின் ஹொசைன் அடித்த பந்தை, விஷால் தடுக்க, கோல் ஆபத்தில் இருந்து தப்பியது இந்தியா. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் போட்டியின் 58 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை சக வீரர் அடித்த பந்தை சுனில் செத்ரி, தலையால் முட்டி கோலாக மாற்ற முயன்றார். இதை வங்கதேச வீரர் ஹம்சா சவுத்துரி தடுத்து வெளியே தள்ளினார். 63வது நிமிடம் கிடைத்த வாய்ப்பில் சுனில் செத்ரி அடித்த பந்து, கோல் போஸ்டுக்கு மேலாக சென்றது. முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' (0-0) ஆனது.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 10ல் ஹாங்காங்கை சந்திக்க உள்ளது.

Advertisement