தேறி வருகிறார் தமிம் இக்பால்

தாகா: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பின் தமிம் இக்பால், தேறி வருகிறார்.
வங்கதேச அணி முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் 36. கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். வங்கதேச பிரிமியர் டிவிசன் தொடரில் (50 ஓவர்) விளையாடினார். பீல்டிங் செய்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்தார்.
மீண்டும் மைதானம் வந்த தமிமிற்கு, இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு ரத்தக்குழாய்களில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இவர், நேற்று லேசான நடைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து வெளியான செய்தியில்,'தமிம் இதய செயல்பாடு வழக்கத்திற்கு மாறாக உள்ளது. திடீரென பாதிப்பு ஏற்படலாம். அடுத்த 48 முதல் 72 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். வழக்கமான பணிகளுக்கு திரும்ப குறைந்தபட்சம் மூன்று மாதம் தேவைப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement