இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்

12

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.


பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர்,1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தில், நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் கதாநாயகன் ஆகவும், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், மாநாடு. அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டு விருமன் என்ற படத்தில் நடித்து இருந்தார். மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார்.


இதற்கு முன்னர், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவர், மலையாள நடிகையான நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீப நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு உடல் நலன் தேறி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.


இன்று ( மார்ச் 25) மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

இரங்கல்



முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.


இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்.,

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், திரைப்பட நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா, இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை

பாரதிராஜா மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதி. அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement