தேர் கவிழ்ந்து விபத்து; பலி 2 ஆக உயர்வு

ஓசூர்: கர்நாடக எல்லையில் கோவில் விழாவில், 150 அடி உயர தேர் கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் பகுதியில் ஹூஸ்கூர் கிராமத்தில், மத்துாரம்மா கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

பல்வேறு கிராமங்களில் இருந்து ஏழு தேர்கள், டிராக்டர் மற்றும் காளை மாடுகள் வாயிலாக இழுத்து வரப்பட்டன. தொட்ட நாகமங்கலம் மற்றும் ராயச்சந்திரா கிராமங்களில் இருந்து இழுத்து வரப்பட்ட, 120 -- 150 அடி உயர இரு தேர்கள், பலத்த காற்றுக்கு சாய்ந்து, பக்தர்கள் மீது விழுந்தன.

இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஓசூரில் தங்கி, பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதி ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த லோகித், 24, பலியானார்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெங்களூரு அருகே கெங்கேரியை சேர்ந்த ஜோதி, 16, இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இந்த சிறுமி தன் குடும்பத்தினருடன் திருவிழாவில் பொம்மை உள்ளிட்ட பொருட்களை விற்க வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.

Advertisement