வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின் கம்பம்

தண்டலம்:காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் கிராமத்தில், தண்டலம், பள்ளம்பாக்கம், கனகம்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இதில், தண்டலம் - புரிசை சாலை ஓட்டி தண்டலம் காலனி கிராமத்திற்கு செல்லும் தெரு உள்ளது. இந்த தெருவில், மின் கம்பம் சாலை நடுவே இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.

குறிப்பாக, பிரதான சாலையில் இருந்து, கிராம தெரு வழியாக டிராக்டர், லோடு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடையூறு மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் நட வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்தும் மின் கம்பம் மாற்றி அமைக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், வீட்டிற்கு தேவையான பொருட்களை கனரக வாகனங்களில் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தண்டலம் காலனி கிராமத்தில் தெருவில் நடுவே இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மின் கம்பம் சாலையோரம் இருந்தது. கான்கிரீட் சாலை போடும் போது சாலை நடுவே வந்துவிட்டது.

ஆய்வு செய்து மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement