வெளியுறவு கொள்கையில் எரிசக்திக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்

1

மும்பை : தற்போதைய புவி அரசியலில், வெளியுறவு கொள்கையில், எரிசக்தி தொடர்பான உறவே முக்கியத்துவம் பெற்றுள்ளது என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக நாம் உலகமயமாக்கல் குறித்து பேசி வந்தோம். தற்போது தொழில் கொள்கைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், வரி போர் போன்றவற்றை இந்த உலகம் சந்தித்து வருகிறது.


ரஷ்யா - உக்ரைன் போர், உலகெங்கும் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எரிசக்தி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாடுகள் தங்களுடைய சொந்த நலனை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.



உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளஇந்தியா, இந்த விஷயத்தில் தனி வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால், உலக அரங்கில் நம் நாடு தனிச்சிறப்பான ஒரு இடத்தில் உள்ளது.



உக்ரைனுடன் பேசுவோம்; அதே நேரத்தில் ரஷ்யாவுடனும் பேசுவோம். இஸ்ரேல், ஈரான், மேற்கத்திய நாடுகள், குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளுடனும் பேசுவோம்.



ஒரு பக்கம், 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள நாடுகளுடன் பேசுவோம். அதே நேரத்தில் 'குவாட்' அமைப்பில் உள்ள நாடுகளுடனும் பேசுவோம். அனைத்து நாடுகளுடனும் சகஜமான உறவை வளர்த்து கொண்டுஉள்ளோம்.


வெளிநாடுகளில் உள்ள நம் துாதரகங்கள் தற்போது, அந்த நாடுகளில் உள்ள பொருளாதார, வர்த்தக வாய்ப்புகள் குறித்த தகவல்களை அளிக்கின்றன. இதன்படி, அந்தந்த நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்தி கொண்டு வருகிறோம்.


உக்ரைன் போரைத் தொடர்ந்து, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிசக்தி வினியோகம் தொடர்பாக, ஒவ்வொரு நாடும் தங்களுடைய வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால், அந்தக் கட்டாயம் நமக்கு இல்லை.


ஏனென்றால், அனைத்து நாடுகளுடனும் ஒரே நிலையில் நட்பு வைத்துள்ளோம். அதே நேரத்தில், நம் வெளியுறவு கொள்கையில், எரிசக்தி முன்னுரிமை பெற்றுள்ளது. இதில் பெட்ரோலியப் பொருட்கள் மட்டுமல்ல, புதுப்பிக்கத்தக்க, பசுமை எரிபொருட்களும் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement