பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு

8

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து விசாரிக்க நீதிபதிகள் குழு முடிவு செய்து உள்ளது.

டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு நீதித்துறை சார்ந்த பணிகளை ஒதுக்க வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச ஐகோர்ட் நீதிபதி ஜிஎஸ் சந்திவாலியா மற்றும் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், யஷ்வந்த் வர்மா வீட்டிற்கு வந்து பணம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், பணம் கைப்பற்றப்பட்ட அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்கவும் 3 நீதிபதிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். பணம் கைப்பற்றப்பட்டது குறித்து அறிந்ததும், யஷ்வந்த் வர்மா யாரிடம் பேசினார்? அவருக்கு தகவல் சொன்ன நபர்கள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீயணைப்புத்துறை தலைவரிடமும் விசாரணை நடத்த நீதிபதிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement