பண மூட்டைகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை! கைவிரிக்கிறார் நீதிபதி யஷ்வந்த் வர்மா

புதுடில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்துள்ளார். தானோ, தன் குடும்பத்தாரோ அவ்வாறு எந்தப் பணத்தையும் வைக்கவில்லை என்று, தன்னிலை விளக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு பங்களாவில், கடந்த 14ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படையினர், நீதிபதியின் பங்களாவில் உள்ள 'ஸ்டோர் ரூம்' எனப்படும் சாமான்கள் வைத்திருக்கும் அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டறிந்ததாக செய்திகள் வெளியாகின. அதில், சில நோட்டுகள் தீயில் எரிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதற்கிடையே, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம் அறிக்கை கேட்கப்பட்டது.
அறிக்கை
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் அவருடைய தரப்பு வாதம் கேட்கப்பட்டது. அவர் அளித்த விளக்கம் மற்றும் தன்னிலை அறிக்கையை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவை, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தீ விபத்து தொடர்பான படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாயாவுக்கு எழுதியுள்ள விளக்க கடிதத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளதாவது:
பணம் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஸ்டோர் ரூம் என்பது, நாங்கள் வசிக்கும் கட்டடத்துக்கு பின்புறம், ஊழியர்கள் குடியிருப்பில் உள்ளது. முக்கிய கட்டடத்தில் இருந்தும், ஊழியர் குடியிருப்பில் இருந்தும் இந்த அறைக்கு செல்ல முடியும்.
அங்கு, பயன்படுத்தப்படாத மரச்சாமான்கள், பழைய தரைவிரிப்புகள், தோட்டப் பராமரிப்பு சாதனங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறை எப்போதும் பூட்டப்படாது. இவ்வாறு பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அறையில், பணத்தை கட்டுக்கட்டாக குவித்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊடகங்கள் இது தொடர்பாக முறையாக விசாரித்திருக்க வேண்டும். அந்த அறைக்கும், நாங்கள் வசிக்கும் கட்டடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அபத்தம்
நானோ, என் குடும்பத்தாரோ அந்த அறையில் பணத்தை பதுக்கி வைக்கவில்லை. அவ்வாறு கூறுவது அபத்தமானது.
தீ விபத்து நடந்தபோது நானும், என் மனைவியும் ஊரில் இல்லை; என் மகளும், அலுவலக ஊழியர்களும் இருந்துள்ளனர். தீ அணைக்கப்பட்ட பின், அங்கு சென்று அவர்கள் பார்த்தபோது பணக் கட்டுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அவ்வாறு அங்கு பணம் இருந்ததாக தீயணைப்புத் துறையினரோ, போலீசாரோ, என் குடும்பத்தார் மற்றும் ஊழியர்களுக்கு காட்டவும் இல்லை.
நானோ, என் குடும்பத்தாரோ பணத்தை அங்கு பதுக்கி வைக்கவில்லை. அவ்வாறு அங்கு பணமும் இல்லை. ஆனால், பிடிபட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இது, எனக்கு எதிராகவும், என்னை அவமதிக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்ட சதியாகவே பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டுக்கு அருகே, குப்பைத் தொட்டியில் சில எரிந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், இதுபோல, அவருடைய பங்களாவுக்கு அருகே, 500 ரூபாய் நோட்டின் சில எரிந்த பகுதிகள் கிடந்ததாகவும், நேற்று மேலும் சில எரிந்த நோட்டுகள் கிடைத்ததாகவும் துப்புரவு பணியாளர்கள் கூறியுள்ளனர். அவற்றை கைப்பற்றி, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும்
-
பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஸ்ரேயாஸ், ஷஷாங்க் அதிரடி: பஞ்சாப் அணி 243 ரன்கள் குவிப்பு