50 பைசா செலவில் அஹிம்சை போராட்டம் டி.இ.டி., நியமனத் தேர்வர்கள் நுாதன எதிர்ப்பு
மதுரை: தொடக்க கல்வியில் 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி முதல்வர், அமைச்சர்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய '50 பைசா' தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள் (டி.என்.எஸ்.ஜி.டி.,) துவக்கினர்.
தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013 முதல் நிரப்பப்படவில்லை. ஆனால் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்காக தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தேர்வுகள் நடத்தியதில் 1.20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆனாலும் 12 ஆண்டுகளாக பணிநியமனங்கள் இல்லை.
தற்போது 5 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் தொடக்க கல்விக்கு உட்பட்ட 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்த மாணவர்கள் சேர்க்கையில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையில் ஆண்டிற்கு 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுவரும் நிலையில் புதிய ஆசிரியர் நியமனங்களை மட்டும் மேற்கொள்ளவில்லை என ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுகுறித்து டி.என்.எஸ்.ஜி.டி., நிர்வாகிகள் கூறியதாவது:
டி.இ.டி., தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் காத்திருந்தும் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. குறிப்பாக ஆசிரியர் நியமனங்களுக்கு நிதியில்லை என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு நியமனங்கள் தொடர்பாக குறிப்பிடும் போது, 'சம்பள செலவினத்தை திட்ட செலவினத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை மாணவர் முன்னேற்ற செலவாகவும், டாக்டர்களுக்கான சம்பளத்தை மக்கள் ஆரோக்கியத்திற்கான முதலீடாகவும் பார்க்க வேண்டும்' என்றார்.
அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்து கவலைப்படுவதில்லை. அவர், 2019 ல் 'அவுட்சோர்ஸிங், தற்காலிக நியமனங்கள் இளைஞர்களின் அறிவு, உழைப்பை குறைந்த கூலிக்கு சுரண்டும் செயல்' என விமர்சித்தார்.
ஆனால் இன்று அவரும் அதையே தொடர்கிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே தொடக்க கல்வித்துறையில் காலியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோரிக்கை தொடர்பாக முதல்வர் வரை முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே 2768 பணியிடங்களை நிரப்ப நியமனத் தேர்வு நடத்தி கொள்கை முடிவு வெளியிட்டது. ஆனால் முழுக்காலிப் பணியிடங்களை வெளியிட்டு, நிரந்தர தகுதி பெற்ற 25 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் துவங்கியுள்ளோம்.
இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுகளை அனுப்பி உள்ளோம். ஒரு லட்சம் கார்டுகள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
மேலும்
-
பாசி படர்ந்த குடிநீர் தொட்டி நல்லுாரில் நோய் பரவும் அபாயம்
-
இனமானத்தை அடகு வைத்து வெகுமானம் பெற மாட்டோம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
-
கள் இறக்குவதற்கு விதித்த தடை நீக்கப்படுமா? முதல்வர் பரிசீலிப்பார் என பொன்முடி விளக்கம்
-
9,970 ரயில் ஓட்டுநர்கள் தேர்வு செய்கிறது ரயில்வே
-
முஸ்லிம்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை: அண்ணாமலை
-
கட்டட வரைபட உடனடி ஆய்வுக்கு புதிய வசதி 'ஆன்லைன்' திட்டத்தில் மாற்றம்