கள் இறக்குவதற்கு விதித்த தடை நீக்கப்படுமா? முதல்வர் பரிசீலிப்பார் என பொன்முடி விளக்கம்

சென்னை:''கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதல்வர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார்,'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

காங்., - ரூபி மனோகரன்: நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான, நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் பொன்முடி: நாங்குநேரி அருகே ஏற்கனவே நான்கு இடங்களில், வள்ளியூர், திருச்செந்துார் ரயில் நிலையம், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில், பனைப்பொருள் அங்காடிகள் உள்ளன. வள்ளியூர், நாங்குநேரி தொகுதியில் உள்ளது.

ரூபி மனோகரன்: சிறிது சிறிதாக அழிந்து வரும் பனை மரங்களையும், பனை தொழிலாளர்களையும் பாதுகாக்க, பனை நல வாரியம் அமைத்ததற்கு நன்றி.

நாங்குநேரி தொகுதியில், பனைத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பனைப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால், பனைத் தொழிலாளர்கள் பலனடைவர்.

எனவே, நாங்குநேரியில் விற்பனை காட்சிக்கூடம் அமைக்க வேண்டும். சர்க்கரையை ரேஷன் கடைகளில் விற்பது போல, கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

பனைத் தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க, நவீன உபகரணம் வழங்க வேண்டும். ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: பனை அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதில்லை. இருக்கும் மாவட்டங்களில், 376 பனை வெல்ல உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், எட்டு மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனங்கள் உள்ளன.

பனைத்தொழிலாளர்கள் வளர்ச்சியில், முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

ரூபி மனோகரன்: பனை மரத்தில் இருந்து கள் இயற்கையாக கிடைக்கிறது. அதில், ரசாயனம் எதுவும் கிடையாது.

அதை பனம்பால் என்று கூறுவர். அதில், சுண்ணாம்பு சேர்த்தால், பதநீர் கிடைக்கும். தற்போது கள் இறக்குவது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் விற்கப்படுகிறது. பனங்கள் உடலுக்கு எந்த தீங்கும் செய்யாது. மருத்துவ குணம் உடையது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

எனவே, பனங்கள்ளுக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்கி, கொள்முதல் செய்து, ஆவின் பால் விற்பனை நிலையங்களை போல், அரசு விற்பனை நிலையங்கள் அமைத்து விற்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: ஒரு காலத்தில் பனங்கள், தென்னங்கள் இறக்கப்பட்டது. கள் சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது. கள் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்தால், போதைப் பொருளாகும். அதனால், தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது எல்லாம் கிடைக்கிறது.

சபாநாயகர்: பனையில் இருந்து இறக்கும் போது கள் ஆகாது. அது பதநீர்தான். அதற்கு அனுமதி கேட்கிறார்.

அமைச்சர் பொன்முடி: பதநீர் உருவாக்குவது தவறு. பதநீர் என்று கூறிவிட்டு கள் இறக்கக் கூடாது. பனை மரத்தை பொறுத்தவரை, பனை பொருட்கள் இணையதளம், மொபைல் போன் செயலி வழியாக விற்கப்படுகின்றன.

பனை ஓலை விசிறிகள், பாய்கள், கூடைகள் என, கைவினைப் பொருட்கள் தயாரிக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும்.

காங்., - அசோகன்: பதநீர் இறக்கும்போது கள் ஆகிறது. அது இயற்கை சீற்றம்.

சபாநாயகர்: அது இயற்கை சீற்றம் அல்ல. பதநீர் இறக்கி வைத்தால், இரண்டு நாளில் கள் ஆகிவிடும்.

அசோகன்:
முன்னர், கள் என வழக்கு போட்டனர். தற்போது, கள்ளச்சாராயம் என வழக்கு போடுகின்றனர். இதை தடுக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:
பதநீர் எப்படி கள் ஆக மாறும் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னர் கிராமங்களில் கள் விற்பனை நடந்தது.

சபாநாயகர்:
போட்டியில் போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் அழைத்துச் சென்றால், தொழில் செய்ய முடிவதில்லை. அதை உறுப்பினர் கூறுகிறார்.

அமைச்சர் பொன்முடி:
சபாநாயகருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பது புரிகிறது. உங்கள் கோரிக்கை குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும். கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதல்வர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement