இனமானத்தை அடகு வைத்து வெகுமானம் பெற மாட்டோம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை:''மத்திய அரசு நிதி தரவில்லை என்பதற்காக, இனமானத்தை அடமானம் வைத்து, வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று சொல்லும் அரசு இது,'' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
'மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தர முடியும்' என, மத்திய அரசு வலியுறுத்துவது குறித்த, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இரு மொழி கொள்கை குறித்து, தமிழகம் என்ன உணர்வுடன் இருக்கிறது என்பதை, பா.ஜ.,வை தவிர்த்து, அனைத்து கட்சிகளும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி காட்டியிருக்கின்றன. மும்மொழி கடிதம் தொடர்பாக, தமிழக அதிகாரிகள் கூறியதாக, லோக்சபாவில் தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் சுட்டிகாட்டினார்.
'எந்த காரணத்தை கொண்டும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என்று தான் நாங்கள் விளக்கம் தந்திருக்கிறோம். நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் தந்துள்ளார்.
இன்று காலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி டில்லி சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில், இதுகுறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும். தமிழக மக்களின் உயிர்நிறை கொள்கையான இரு மொழி கொள்கை குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்த கருத்துக்களோடு, தமிழக அரசும் முழுமையாக உடன்படுகிறது.
தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இரு மொழி கொள்கை; அதில், எந்த மாற்றமும் இல்லை. இது, இரு மொழி கொள்கை மட்டுமல்ல; நமது வழிகொள்கையும், விழிக்கொள்கையும் இதுதான். எந்த பழிச்சொல் சொன்னாலும், இந்த உயிர் கொள்கையை விட்டு தர மாட்டோம்; விட்டு விலக மாட்டோம் என்பதை, உறுதியாக பதிவு செய்கிறேன்.
'ஹிந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம்' என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம்; தமிழ்மொழி காப்போம் என்ற அந்த உறுதியை நான் அளித்துள்ளேன். இதற்கு, 2000 கோடி என்ன, 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், மும்மொழி கொள்கை திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டேன்.
இது, பணப் பிரச்னை அல்ல; நம் இனப் பிரச்னை. தமிழை, தமிழினத்தை, தமிழக மாணவர்களை, இளைய சமுதாயத்தை காக்கும் பிரச்னை. மத்திய அரசு நிதி தரவில்லை என்பதற்காக, இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று சொல்லும் அரசு இது.
இந்த ஆட்சியில் சமூக நீதியும், தமிழ்மொழி காப்பும் இரண்டு கண்கள். தாய் நிலத்துக்கு தமிழும், உலக தொடர்புக்கு ஆங்கிலமும் என்று, அண்ணாதுரை வடித்த சட்டம். இந்த இரு மொழி கொள்கை தான் அரை நுாற்றாண்டு காலமாக, தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது.
உலகளாவிய பரப்பில், தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உயர்த்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்தது, இந்த இருமொழி கொள்கை. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள். யார் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதேநேரத்தில், தாய் மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும், அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான், இரு மொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்.
மொழி கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைபாடும் சரி என்பதை அண்டை மாநிலங்கள் துவங்கி, நாட்டின் பல மாநிலங்களும் இப்போது உணர்ந்து வருவதை பார்க்கிறோம். இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை வரலாற்று பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், இரு மொழி கொள்கையை சிக்கென பிடிக்கிறோம்.
ஹிந்தி மொழி திணிப்பு என்பது, ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான், இதில் உறுதியாக இருக்கிறோம்; இருப்போம். ஹிந்தி திணிப்பு வாயிலாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். அதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால்தான், இதுபோன்ற மொழி திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கின்றனர். எனவே, நாட்டின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும், மிகச் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில், நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான், தமிழ் மொழியை காக்க முடியும்; தமிழினத்தையும் உயர்த்த முடியும். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி