முஸ்லிம்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை: அண்ணாமலை

10

சென்னை : தமிழக பா.ஜ., சிறுபான்மையினர் அணி சார்பில், ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.


இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி வரவேற்புரை ஆற்றினார்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேசியதாவது:



பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான் தி.மு.க.,வினர். இன்று, ஓட்டு வங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரின் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற மாநிலங்களில், சிறுபான்மையின மக்கள் பா.ஜ.,வுக்கு எப்படி ஓட்டளிக்கின்றனரோ, அதேபோல், தமிழகத்திலும் ஆதரவு அளிக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ., எத்தனை முறை லோக்சபா தேர்தல் வந்தாலும், மோடி தான் பிரதமர். அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் தலைவர் மோடி தான்,'' என்றார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:



பிரதமர் மோடி ஆட்சியில், நாட்டில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 37 சதவீத வீடுகள் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

'முத்ரா' கடன் திட்டத்தில், 32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 36 சதவீதம் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், 33 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க மத்திய அரசு, 51,000 ரூபாய் வழங்குகிறது.

நோன்பு திறந்த பின் வீட்டிற்கு சென்று, 10 நிமிடம் மனசை திறந்து, பா.ஜ., எங்கேயாவது சிறுபான்மையின மக்களுக்கு எதிரியாக இருந்திருக்கிறதா என்று, நினைத்து பார்க்க வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை; ஆனால், சிறுபான்மையின ஆதரவாளராக தன்னை ஸ்டாலின் காட்டிக் கொண்டிருக்கிறார்.

உலகில், 20 நாடுகள் தங்களின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளன. அதில், ஏழு இஸ்லாமிய நாடுகள். ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள், பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்பு அளிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement