கட்டட வரைபட உடனடி ஆய்வுக்கு புதிய வசதி 'ஆன்லைன்' திட்டத்தில் மாற்றம்

சென்னை:கட்டட அனுமதிக்காக தாக்கல் செய்யப்படும் வரைபடங்களை உடனடியாக சரிபார்த்து, தவறுகளை தெரிவிக்க, 'ஆன்லைன்' திட்டத்தில், புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொறியாளர்கள் வாயிலாக விண்ணப்பங்கள், ஆவணங்கள், வரைபடங்களை, ஆன்லைன் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் வரைபடங்கள் தானியங்கி முறையில் சரி பார்க்கப்படும் என, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது தெரிவித்தனர். இதுவரை, வரைபடங்கள் தானியங்கி முறையில் சரிபார்க்கப்படுவதில்லை. இதற்கான, 'சாப்ட்வேர்' இத்திட்டத்தை வடிவமைத்த தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதனால், வரைபடங்களை சாப்ட்வேரை பயன்படுத்தி சரிபார்க்க, அதிகாரிகள் வெளியாரின் உதவியை நாடும் நிலை இருந்தது.

இந்நிலையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஆன்லைன் முறைக்கு வந்துள்ள நிலையில், கட்டட வரைபடங்களை உடனடியாக ஆய்வு செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில், ஆன்லைன் முறையில் கட்டட அனுமதி வழங்கினாலும், வரைபட ஆய்வில் அதிக தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இதில் வரைபடங்களை, ஆட்டோகேட் முறையில் இயக்கி பார்க்கும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், வரைபடங்களை பதிவேற்றம் செய்யும் பொறியாளர், சாப்ட்வேர் வாயிலாக வரைபடத்தை சரி பார்க்க முடியும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட வரைபடம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா, அதில் மாற்றங்கள் தேவைபடுகிறதா என்பதை விண்ணப்பதாரரும், சம்பந்தப்பட்ட அதிகாரியும் உடனடியாக தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், கட்டட அனுமதியில் வரைபட ஆய்வுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்படும். அதுமட்டுமல்லாது, கட்டட அனுமதியின் போது, அதற்கு தாக்கல் செய்யப்படும் அனைத்து ஆவணங்களும், ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு உடனடியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், கட்டட அனுமதியின் போதே அந்த திட்டம், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவுக்கு செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தல் வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement