ஏக்நாத் ஷிண்டே குறித்து காமெடியன் விமர்சனம்; ஹோட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்

9


மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து பிரபல காமெடியன் விமர்சனம் செய்து பேசியதை தொடர்ந்து, அவரது நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலை சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான ஏக்நாத் ஷின்டே, சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தற்போது துணை முதல்வராக இருக்கிறார். உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியை இரண்டாகப் பிளந்து, அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்பட வழிவகை செய்தவர். இதனால் அவரை உத்தவ் தலைமையிலான கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா, தனது நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து துரோகி என்று விமர்சித்து பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

காம்ராவின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, மும்பையின் ஹார் பகுதியில் குணால் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர், குணால் காம்ராவின் போட்டோவை தீவைத்து கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் கனல், ஷிண்டேவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் போலீஸில் புகார் அளித்தார். மேலும், சிவசேனா எம்.எல்.ஏ., முராஜி படேல் அளித்த புகாரின் பேரிலும் குணால் காம்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினரின் இந்த செயலுக்கு உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement