ஹூரியத்தில் இருந்து 2 கட்சிகள் விலகல்: அமித் ஷா வரவேற்பு

3

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத குழுவான ஹூரியத் அமைப்பில் இருந்து, இரண்டு கட்சிகள் விலகியுள்ளன. இது பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


ஜம்மு -- காஷ்மீரை தனியாகப் பிரிக்கக் கோரி, பல கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கோடு, 1993ல் உருவாக்கப்பட்டது ஹூரியத் அமைப்பு. இந்த அமைப்பில் இருந்த, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய கட்சிகள் அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன.


இது குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதம் என்பது வரலாறாக மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் மக்களை ஒருங்கிணைக்கும் கொள்கை, ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதத்தை துரத்தி வருகிறது.



பிரிவினைவாத கொள்கை உடைய ஹூரியத் அமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் அறிவித்துள்ளன. பாரதத்தின் ஒற்றுமையை வலுசேர்க்கும் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.


பிரிவினைவாத கொள்கை உடைய மற்றவர்களை, அவற்றை முற்றிலுமாக கைவிட்டு வரும்படி அழைக்கிறேன். ஒருங்கிணைந்த பாரதம், வளர்ச்சி, அமைதிக்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


பிரிவினைவாத அமைப்புகளான, மிர்வாயிஸ் உமர் பரூக் தலைமையிலான அவாமி செயல் குழு, மவுலவி மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் இதிஹாதுல் முஸ்லிமின் ஆகியவற்றுக்கான தடையை, மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இரண்டு கட்சிகள், பிரிவினைவாதத்தை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement