கிராம மக்களால் சிவிங்கிப்புலிகளின் உயிருக்கு ஆபத்து; வனத்துறை செய்த காரியம்

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தில் கிராம மக்களால் சிவிங்கிப்புலிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, வனத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய சிவிங்கி புலி ஒன்று, தெலியபுரா கிராமத்தில் பசு ஒன்றை வேட்டையாடி உள்ளது. இதனால், கொந்தளித்த கிராம மக்கள், சிவிங்கிப்புலியையும், அதன் குட்டிகளையும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியோடு, குச்சிகளைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்களால் சிவிங்கிப்புலிகளின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஷியோபூர் மாவட்ட நிர்வாகமும், குனோ தேசிய பூங்கா அதிகாரிகளும், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

சிவிங்கிப்புலிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், சிவிங்கிப்புலிகளால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறிய அதிகாரிகள், சிவிங்கிப்புலிகளை கண்டால் முதலில் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கால்நடைகளையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை விட்டு சிவிங்கிப்புலிகள் தானாகவே வெளியேறும் இயல்பை கொண்டிருப்பதால், அதனை பாதுகாப்பாக வெளியேற மக்கள் அனுமதிக்க வேண்டும். கால்நடைகள் வேட்டையாடப்பட்டால், அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படும்.

வனப்பகுதிக்குள் தனியாக செல்லக் கூடாது. கற்கள் மற்றும் தடிகளை வைத்து சிவிங்கிப்புலிகளை தொந்தரவு செய்யக் கூடாது. சிவிங்கிப்புலிகளை பொறி வைத்து பிடிக்கக் கூடாது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 11 குட்டிகள் உள்பட 17 சிவிங்கிப்புலிகள்குனோ தேசிய பூங்காவில் சுற்றி வருகின்றன. 9 சிவிங்கிப்புலிகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் முற்றிலும் அழிந்து போன நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அவை கொண்டுவரப்பட்டுள்ளன.
குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ள இந்த சிவிங்கி புலிகள், குட்டிகளை ஈன்று இனப்பெருக்கம் செய்துள்ளன. அவற்றை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Advertisement