எட்டாயிரம் கிலோமீட்டர் பயணம்!

இகுவானா எனும் பல்லி இன ஓணான்கள், வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியிலும், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியிலும், கரீபியன் தீவுகளிலும் வாழ்கின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகை பல்லி மட்டும் பிஜி தீவுகளில் காணப் படுகிறது.

இந்தத் தீவு ஆஸ்திரேலிய கண்டத்திற்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே நடுக்கடலில் தனித்து இருக்கிறது. இவ்வளவு தொலைவில், கடலால் சூழப்பட்டிருக்கும் தீவிற்கு இந்தப் ஓணான்கள் எப்படி வந்தன என்பது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.

இவை, தென் அமெரிக்காவிலிருந்து கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் இதுவரை எண்ணி இருந்தனர். ஆனால், சமீபத்திய கலிபோர்னியா பல்கலை ஆய்வு வேறு ஓர் ஆச்சரியமான தகவலைத் தந்துள்ளது.

அதாவது மரபணு ரீதியாக பிஜி தீவுகளில் வாழும் ஓணான்கள் தென் அமெரிக்கப் ஓணான்களோடு தொடர்புடையவை அல்ல. மாறாக வட அமெரிக்காவில் வாழ்பவையோடு தொடர்புடையவை. எனவே இவை வட அமெரிக்காவில் இருந்து, குறிப்பாக கலிபோர்னியா முதலிய மாகாணங்களில் இருந்து கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவை கிட்டத்தட்ட 8,000 கிலோ மீட்டர் துாரத்தை நீந்திக் கடந்து இந்தத் தீவை அடைந்துள்ளன. இவ்வளவு தொலைவைக் கடலில் நீந்திக் கடக்கும் தன்மையுள்ள, முதுகெலும்புள்ள ஒரே நிலவாழ் உயிரினம் இந்த இகுவானா ஓணான் தான்.

பொதுவாகவே இவற்றால் நீண்ட காலம் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும். இந்தத் திறன் தான் இவ்வளவு துாரத்தைக் கடந்து வருவதற்கு உதவி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisement